Monday, March 12, 2018

வாப்பா ஓதிய அல் குர்ஆன் ஆயத்துக்கள்.........1


புனித அல் குர்ஆனில் இருந்து சில சூறாக்களை, குறிப்பிட்ட சில ஆயத்துக்களை வாப்பா தவறாமல் ஓதி வருவார். அவதானித்து இருக்கிறேன். தொழுது முடிந்தவுடன் அவர் சூறா யாசீனை ஓதி முடிப்பார். எழுந்து வரும் பொழுது அஸ்மா உல் ஹுஸ்னாவை முனுமுனுத்தபடி வருவார். சைக்கிளை எடுப்பார். ஓதியவாறே என்னையும் ஏற்றிக் கொண்டு மிதி வண்டியை மிதித்து மிதித்து செல்லத் துவங்குவார். அவர் ஓதி முடியும்வரை பேசுவதற்கு காத்திருப்பேன்.


ஒருநாள் அவரிடம் அவர் ஓதுகின்ற ஆயத்துக்களைப் பற்றிக் கேட்டேன். 


அவர் ஐவேளை தொழுகைக்குப்சூ பின்னர்றா தவறாமல் சூறா யாசினை ஓதுவதாக சொன்னார். ஓதி முடிந்தவுடன் அதனையும் அவர் செய்த நன்மைகளையும் மரணித்த அனைத்து ரூஹானிகளுக்கும் ஹதியா செய்து (அன்பளித்து) அதன் நன்மைகளை அவர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சுவதாக சொன்னார்.


"என்னது" என்று ஆச்சரியப்பட்ட நான் “அப்படியானால் உங்களுக்கு நன்மைகள் கிடைக்காதே?” என்று கேட்டேன்.


“அப்படி நடக்காது......” என்ற அவர் சிரிப்புடன் இப்படி விளக்கினார். “நாம் செய்கின்ற அனைத்து நல்ல விடயங்களும் எரிக்கப்படுகின்ற ஒரு விளக்கின் ஒளிக்கு ஒப்பாகும். அந்த விளக்கின் ஒளி மூலம் எத்தனை விளக்குகளுக்கும் ஒளி கொடுக்க முடியும். அப்படி ஒளி கொடுக்கப்படுகின்ற காரணத்தால் இந்த விளக்கின் ஒளி குறைவதில்லை. மாறாக மற்ற விளக்குகள் அந்த விளக்கின் ஒளியின் காரணமாக ஒளிர்க்கப்படுகின்ற பொழுது பிரமாண்டமான பேரொளியே ஏற்படும். அந்தப் பேரொளிக்கு நமது சின்ன அமல் காரணமாக இருப்பது சிறப்பாகும். மற்றது, நான் இந்த வேண்டுகோளை முன்வைப்பது அகிலங்களின் இரட்சகனிடம். அவன் அதற்கான ஆற்றல் உள்ளவன். அவனது வல்லமையின் முன்னால் இது வெறும் தூசு."


நான் சிந்திக்கத் துவங்கினேன்.


அவர் தினமும் தவறாமல் ஓதுகின்ற இரண்டு ஆயத்துக்களைப் பற்றி எனக்கு சொல்லத் துவங்கினார். அதனை அவருக்கு மணி மொழி ஆசிரியர் என்று அழைக்கப்பட்ட மௌலவி கலீலுர் ரஹ்மானின் மாமா முறையிலான ஒரு இஸ்லாமிய அறிஞர் சொல்லித் தந்ததாகவும் அதனை மனணமிட்டு தவறாமல் ஓதி வருமாறும்  பரிந்துரைத்தார். “உனது இம்மை மறுமை வாழ்வின் பெருவெற்றிக்கு இதுவொன்றே போதும்” என்றும் கூறினார்.



சின்னவனாக இருந்த காரணத்தால் அதன் முக்கியத்துவத்தை நான் அறியவில்லை. அதனால் அதனை நான் செய்யவில்லை. வளர்ந்ததன் பின்னர் இஸ்லாமிய இயக்கங்களின் வீரியமான பிரச்சார செல்வாக்கின் காரணமாக ‘பிதுஅத்’துக்கு எதிரான போக்கு என்று அதனை நான் செய்ய முயற்சிக்கவில்லை.



இன்று ஆச்சரியமான செய்தி ஒன்றைக் கண்டேன். கண்டவுடன் கவலைக் கொண்டேன்.புனித அல் குர்ஆனில் இருக்கின்ற சூறா பகராவின் இறுதி இரண்டு ஆயத்துக்கள் மிகவும் முக்கியமான சிறப்புக்கு உரியவைகளாகும் என்று அந்த செய்திகள் எனக்கு உணர்த்தின.



நபிகளாருக்கு அல் குர்ஆனின் ஆயத்துக்களை வானவர் தலைவர் ஹசரத் ஜிப்ரீல் (அலை) வஹியாக அறிவித்தார். நமக்குத் தெரிந்த செய்தி. நபிகளார் அதனை ஓதிக் காட்டினார்கள். அதனையும் நாம் அறிவோம். ஆனால், சூறா பகராவின் இறுதி ஆயத்துக்கள் இரண்டையும் நபிகளாருக்கு வஹியாக ஹசரத் ஜிப்ரீல் வஹியாக கொண்டு வரவில்லை. அவர் அதனை ஓதிக் காட்டவும் இல்லை. நபிகளார் விண்ணுலக பயணம் சென்ற பொழுது, சிதரத்துள் முந்தஹாவைக் கடந்து சென்றதன் பின்னர் நபிகளாருக்கு அல்லாஹ்வினால் நேரடியாக அருளப்பட்ட வசனங்களாக  அந்த ஆயத்துக்கள் சிறப்புறுகின்றன.



சிறப்பான அந்த ஆயத்துக்களின் தமிழ் வடிவம் இப்படி ஒலிக்கிறது.



“(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும்அவனுடைய மலக்குகளையும்அவனுடைய வேதங்களையும்அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். "நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்" என்று கூறுகிறார்கள்.” [2:285]




“அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கேஅது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்;) "எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும்அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!" [2:286]




நம்மைப்போல கல்வியில், தகவல் தொழில் நுட்பத்தில், மார்க்க அறிவில் என்று நமது முன்னோர்கள் முன்னேற்றம் அடையாமல் இருந்திருந்தாலும் அவர்கள் நம்மைவிடவும் சிறப்பாக வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள்.



அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.

No comments:

Post a Comment